“கல்வாழை மூலம் வீட்டில் நீரை மறுசுழற்சி செய்யலாம்..!” & மதுரை இளைஞரின் சக்ஸஸ் ஐடியா

மறுசுழற்சி

”பருவமழை பொய்த்துப்போய் தண்ணீருக்காக அல்லல்படும் போதுதான் தண்ணீர் சேமிப்பு பற்றி யோசிப்போம். அதுவரை நமக்கும் தண்ணீருக்கும் சம்மந்தமே இல்லாத மாதிரிதான் இருப்போம்’’ என்கிறார் தேனியைச் சேர்ந்த சக்திவேல்.

தண்ணீர் சேமிப்பு தொடர்பாக ‘ரெயின்ஸ்டாக்’ என்ற நிறுவனத்தை நடத்திவரும் இவர், மதுரை, தேனி, கோவை, தஞ்சை போன்ற நகரங்களின் முக்கியமான பெரிய பெரிய கட்டடங்களில் மழைநீர் சேமிப்பு அமைப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். மேலும், இயற்கை முறையில் மறுசுழற்சி செய்து கழிவுநீர் சுத்திகரிப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கிறார்.

“கடந்த மூன்று வருடங்களாக ‘ரெயின் ஸ்டாக்’ என்ற நிறுவனத்தைச் சமூகத் தொழிலாக செய்துவருகிறேன். வீடுகளுக்கு, பெரிய அலுவலகங்களுக்கு மழைநீர் சேமிப்பு அமைப்பை ஏற்படுத்திக் கொடுப்பதும், கழிவு நீரை இயற்கை முறையை பயன்படுத்தி சுத்திகரிக்கும் அமைப்பை ஏற்படுத்திக் கொடுப்பதுமே எனது தொழில். இதன் மூலம் பெரியளவில் லாபம் கிடைக்காது என்ற போதிலும் மன நிறைவை  உணர்கிறேன். இதைச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனமாகத்தான் கருதுகிறேன். பல இடங்களில் காசு வாங்காமல் கூட வந்திருக்கிறேன்” என மகிழ்ச்சியாக ஆரம்பிக்கிறார் சக்திவேல்.

”ஆறு, ஏரி, குட்டை, குளங்கள் சூழந்த ஒரு கிராமத்தில்தான் நான் வளர்ந்தேன். எனவே சிறுவயது முதல் தண்ணீர் மீது ஓர் ஈர்ப்பு எனக்குள் இருந்துகொண்டே இருக்கும். எங்களுக்கு ஆறு என்றால் அது வைகை ஆறுதான். மதுரையில் கல்லூரிப் படிப்பை மேற்கொண்டபோது வைகையில் கொட்டப்படும் குப்பைகளையும், கலக்கப்படும் கழிவுநீரையும் பார்த்தால் மனம் நோகும். வைகையை நாம் எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று தோன்றும். அந்தச் சமயம் எனக்கு அறிமுகமானவர்தான் சிவராஜ். ’நேட்டிவ் லிட்’ என்ற சுற்றுச்சூழல் நிறுவனத்தை வைத்து நடத்திக்கொண்டிருந்தவரிடம் ‘வைகை நதி சேமிப்பு’ என்ற எனது கனவுத் திட்டத்தைப் பற்றிச் சொன்னேன். திட்டத்தால் ஈர்க்கப்பட்ட சிவராஜாவும் என்னுடைய கல்லூரி நிர்வாக இயக்குநரும் தந்த ஊக்குவிப்பால் மற்ற மாணவர்களைச் சேர்த்துக் கொண்டு செயல்பாட்டில் இறங்கினேன். ஆனால், முழுமையாகச் செயல்படுத்தி திட்டத்தை முடிக்க முடியவில்லை. அடுத்த சில முயற்சிகளும் வெற்றியடையவில்லை.

இயற்கையைப் பாதுகாக்க நான் எடுத்துவைக்கும் ஒவ்வொர் அடியும் சறுக்கல்களில் போய் முடிவதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ’ஊரைத் திருத்துவதற்கு முன்னால் நீ திருந்து’ என்பார்கள். அதன்படி  ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் சேகரிப்பு இருக்கிறதா? முறையாகத் தண்ணீரை வீணாக்காமல் பயன்படுத்துகிறார்களா போன்ற கேள்விகளை எனக்குள்ளே கேட்டுக்கொண்டேன். விளைவு, மழைநீர் சேமிப்பைப் பற்றி எங்கள் வீட்டில் துவங்கி எங்கள் ஏரியா முழுவதும் விழிப்புஉணர்வு செய்தேன். அனைவரது வீட்டிலும் மழைநீர் சேமிப்பை ஏற்படுத்தினேன். அந்த ஆர்வம் ஒரு கட்டத்தில் நிறுவனமாக உருவானது. 2014 ஜூன் ஆரம்பிக்கப்பட்ட அதற்கு ’ரெயின் ஸ்டாக்’ என்று பெயரிட்டேன். அதன் நோக்கம், வறண்ட தென் மாவட்டங்களை மழை நீர் சேமிப்பு மூலம் பசுமை மண்டங்களாக மாற்ற வேண்டும் என்பதே.

மறுசுழற்சி

குழித் தோண்டி மண், கல் போடுவதற்கு பதில், சில தொழில்நுட்ப உதவியுடன் மண்வளம் சோதிக்கப்பட்டு, எந்த இடத்தில் மழைநீர் சேமிப்பு தொட்டி அமைத்தால் நிலத்தடிநீருக்கு நல்லது என்பது உட்பட பல புதுமைகளை மழை நீர் சேகரிப்பில் புகுத்தினேன். வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவமனைகள் எனப் பல இடங்களில் மழைநீர் சேகரிப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளேன். சில இடங்களில் ஒரு தெரு மொத்தத்திற்கும் ஒரே இடத்தில் ’கம்யூனிட்டி பேக்கேஜ்’ எனும் சேமிப்பு அமைப்பை ஏற்படுத்தியுள்ளேன். அதிகபட்சமாக 35 வீடுகளுக்கும் சேர்த்து ஒரே இடத்தில் கம்யூனிட்டி பேக்கேஜ் அமைப்பை, மதுரையில் இருக்கும் ஒரு தெருவில் அறிமுகம் செய்தேன்.” என்றவரிடம், இயற்கை முறையில் கழிவு நீர் சுத்திகரிப்பு முறையை பற்றி சொல்லுங்களேன் என்றோம்

”வீட்டிலோ, அலுவலகத்திலோ, நாம் பயன்படுத்தி வெளியேற்றும் நீரில் 70% மறுசுழற்சி செய்து பயன்படுத்தக் கூடியதுதான். எனவே அந்த நீரை RBS தொழில்நுட்பமுறையில் மறுசுழற்சி செய்யலாம். அதாவது, ஆற்றில் செல்லும் அழுக்கு நீரை, கூழாங்கற்கள், நாணல் புல்லின் வேரிலுள்ள பாக்டீரியாக்கள் சுத்தப்படுத்துவதுபோல, பயன்படுத்தப்பட்ட நீரைச் சுத்தப்படுத்தி மீண்டும் பயன்படுத்தலாம். இந்த முறையில், கல்வாழையை அதிகமாகப் பயன்படுத்துகிறோம். ஏனென்றால் அதற்கு அழுக்கையும், விஷத்தன்மை கொண்ட பொருள்களையும் ஈர்க்கும் தன்மை அதிகம். அந்த நீரை குடிக்கலாம், தோட்டத்திற்கு பயன்படுத்தலாம். இந்த முறையில் மறுசுழற்சி செய்வதற்கு மின்சாரம் தேவையில்லை. நீரை மறுசுழற்சி செய்யும்போது sludge எனப்படும் சகதிகள் ஏற்படாது.

மறுசுழற்சி

மதுரைக்கு அருகில் இருக்கும் கருமாத்தூரில் உள்ள அருள் ஆனந்தர் கல்லூரியில் இந்த இயற்கை சுத்தீகரிப்பு அமைப்பை ஏற்படுத்திக்கொடுத்துள்ளேன். இன்று வரை சிறப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது. சில பெரிய பள்ளிகளிலும் இந்த அமைப்பை ஏற்படுத்திக்கொடுத்துள்ளேன். வீடுகளுக்கும் இந்த அமைப்பு அதிகப் பயனுள்ளதாக இருக்கும். செலவும் குறைவு, மின்சாரம் தேவையில்லை என்பதால் மக்கள் அதிகமாக இந்த சுத்தீகரிப்பு முறையை விரும்புகிறார்கள்.

அடுத்ததாக விவசாயிகளுக்கு உதவும் ஷாஃப்ட் (SHAFT) என்ற கருவியைக் கண்டறிந்தேன். கனமழை காலங்களில் அதிகமாகத் தேங்கும் தண்ணீரால் பயிர்கள் அழிவதைத் தடுக்க இந்த ஷாஃப்ட் கருவியை வயலின் மூலையில் பொருத்திவிட்டால் போதும். அது அதிகபட்ச நீரை வெளியேற்றிவிடும். இதனால் பயிர்கள் பாதுகாக்கப்படும்.’’ என்றார்.

பேராசிரியர் அரவிந்தன் மற்றும் என் கல்லூரித் தோழி கங்காதேவி மற்றும் சில நண்பர்களை உள்ளடக்கியதுதான் எனது குழு. கங்காதேவி மக்களுக்கு மழைநீர்சேமிப்பு விழிப்புஉணர்வு ஏற்படுத்துவதில் திறமையானவர். பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களுக்கு மழை நீர் சேமிப்பு குறித்து வகுப்பு எடுத்தால் அந்த மாணவர்களில் மூன்றில் ஒருவர் வீட்டில் மழை நீர் சேகரிப்புத் தொட்டியை உருவாக்கிவிடுவார்.

ஆரம்பத்தில் எங்கள் வீட்டில் கடுமையான எதிர்ப்பு எனக்கு இருந்தது. ’பொழப்பைப் பார்க்காமல் இப்படித் தண்ணீர் சேமிக்க சொல்லி ஊர் ஊரா அலையுற. போய் பொழப்ப பாருடா…’ என்று திட்டுவார்கள். ஆனால், நாள்கள் நகர, எனது ஆர்வத்தையும், விடாமுயற்சியையும் கண்டு எதுவும் சொல்லவில்லை. கடந்த 2015ம்ஆண்டு மதுரையின் நடைபெற்ற சங்கம்-4  நிகழ்ச்சியில் ‘நம்பிக்கை நாயகன்’ விருது எனக்கு வழங்கப்பட்டது. அதற்கு என்னை விட என் குடும்பத்தினர்தான் அதிகமாக சந்தோசப்பட்டனர்.

source : Vikatan

Advertisements

Author: youngstersthefutureofindia

Exposing political plays and bringing news from any field to the public - the fastest.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s